வாஷிங்டன்,’பாகிஸ்தான் மோதல் போக்குடன் வன்முறையை துாண்டி விட்டால், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, தன் ராணுவத்தை பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என, அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
அமெரிக்காவின் உளவு அமைப்புகள், உலகெங்கும் உள்ள நிலவரம் தொடர்பான தன் அறிக்கையை, அந்த நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளன. அதில், கூறப்பட்டு உள்ளதாவது:
பதற்றமான சூழல்
இந்தியா – சீனா, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு பதற்றமாகவே உள்ளது. இது, மோதலாக வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கடந்த ௨௦௨௦ல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியா – சீனா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உள்ளது.
எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. எந்த நேரத்திலும் இது மோதலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவும் தொடர்ந்து மோசமாகவே உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் பேச்சு கிடையாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
கடந்த ௨௦௨௧ல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பேச்சு துவக்கம்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அமைதி பேச்சு முன்னெடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுடனான மோதல் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை உருவானால், தன் நாட்டில் எங்காவது பயங்கரவாத சம்பவம் நடந்தால், பாகிஸ்தானுக்கு எதிராக தன் ராணுவத்தை இந்தியா களமிறக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை துாண்டிவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இரண்டு நாள் பேச்சு நேற்று துவங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்