புதுச்சேரி: புதுவை சட்டசபையில் உரையாற்ற வந்த பொறுப்பு கவர்னர் தமிழிசைக்கு எதிராக சுயேச்சை எம்எல்ஏ போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று காலை 9.45 மணிக்கு கவர்னர் உரையுடன் துவங்கியது. பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி கவர்னர் தமிழிசை உரையை படிக்க தொடங்கினார். அப்போது, சுயேச்சை எம்எல்ஏ நேரு, இருக்கையில் இருந்து எழுந்து ‘மத்திய அரசே… மத்திய அரசே… புதுச்சேரிக்கு நிரந்தர கவர்னரை நியமித்திடு…’ ‘வேண்டாம் வேண்டாம், இரவல் கவர்னர் வேண்டாம்’ என எழுதப்பட்ட பதாகையை கையில் பிடித்தபடி அவையில் உயர்த்தி காட்டினார். அப்போது எம்எல்ஏவை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் செல்வம் கூறினார். ஆனால் அவர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். கவர்னர் உரை முடித்து சென்றதும், நேரு எம்எல்ஏ மீண்டும் வந்து நான் அவையில் கலந்து கொள்ளலாமா? வெளியே ெசல்லவா?, என்றார்.
சபாநாயகர் செல்வம்: கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதே, எம்எல்ஏக்கள் பதாகைகள் மற்றும் தடை செய்யப்பட்ட வேறு எந்த பொருட்களையும் உள்ளே கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி நீங்கள் பதாகைகளை எடுத்து வந்துள்ளீர்கள். உங்களிடம் விளக்கம் கோரப்படும். பதில் திருப்தியளிக்காவிட்டால் நடவடிக்கை இருக்கும். நேரு: என் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? சபாநாயகர்: சட்டசபைக்கு என்று மாண்பும் மரியாதையும் உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் பேப்பரை கிழித்து போட்டதற்கு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். உடனே நேரு எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்தார்.
* முன்கூட்டியே ஒலித்த தேசிய கீதம் கவர்னர் பேச்சை நிறைவு செய்வதற்கு முன்னதாகவே, கவனக்குறைவாக தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டதால், எம்எல்ஏக்களும் எழுந்து நின்றனர். பின்னர் உரை இன்னமும் நிறைவடையவில்லை எனசுட்டிக்காட்டி, தேசிய கீதம் ஒரு சில நொடிகளில் நிறுத்தப்பட்டது. பின்னர் உரையை வாசித்து முடித்ததும். மீண்டும் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது.