சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல ஆலோசனைகளை மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுக கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதித்தோம். மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டியது குறித்து ஆலோசித்தோம்.
பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம் என்று கூறினார்.