திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் 32 சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு உடனே அகற்ற வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. பின்னர், அவர் அளித்த பேட்டி: திருவண்ணாமலை அருகே விதிமுறைகளை மீறி அமைந்துள்ள சுங்கச்சாவடி, கிரிவலத்துக்கு வரும் மக்களிடம் கட்டண கொள்ளை நடத்தும் வசூல் மையமாக செயல்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு நிறுவனத்தை உருவாக்கி நாடு முழுவதும் உள்ள இந்த வசூல் மையங்களை நடத்தி வருகிறார்.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக அமைந்துள்ள 32 சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், ஒன்றிய அரசு நீக்கவில்லை.
எனவே, உடனடியாக சட்டவிரோத சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். அதுவரை, சுங்கச்சாவடியை சுற்றிலும் 20 சதுர கிமீ பரப்பளவில் உள்ள உள்ளூர் மக்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல பாஸ் வழங்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ரவியின் செயல்பாடு அராஜகமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.