விருதுநகர்: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கின்றனர். அரசியல் காரணங்களுக்காக பாஜ வதந்தி பரப்பி வருகிறது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பீகார் மாநில ஆளும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி செய்தித் தொடர்பாளர் ரித்து ஜெய்ஸ்வால் வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலை, அச்சக ஆலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் நிலை குறித்து நேற்று ஆய்வு செய்தார். தொழிலாளர்களிடமும் பணி புரியும் இடங்கள், வசிப்பிடங்களில் துன்புறுத்தல் அல்லது குறைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் வடமாநில வாலிபர்கள் துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என தமிழ்நாடு காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. இந்த வதந்திகளின் ஒரே நோக்கம் தமிழ்நாடு அரசையும், பீகார் அரசையும் களங்கப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகாரில் அரசியல் காரணங்களுக்காக பாஜ வதந்தி பரப்பி வருகிறது. இன்று பீகாரில் அதிகாரம் கைமீறி போய்விட்டதாக கவலையில் இருப்பவர்கள், இதுபோன்ற வதந்திகளையும் போலியான வீடியோக்களையும் பரப்பும் வேலையை செய்துள்ளனர்.
இது ஒரு கசப்பான உண்மை என்றாலும் பீகார், தமிழ்நாட்டு மக்கள் பாஜவின் வஞ்சகமான தந்திரங்களை புரிந்து கொண்டுள்ளனர். இந்த மாநிலங்களில் பாஜவிற்கு எதிர்காலம் இல்லை. பீகாரில் வேலையில்லா திண்டாட்டம் என்று கூக்குரலிடும் பாஜவினருக்கு இந்திய நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்பது தெரியாதா?. 17 ஆண்டுகளாக பீகாரில் அதிகாரத்தில் இருந்தபோது வேலைவாய்ப்பை உருவாக்க நினைக்கவில்லையே?
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை தருகின்றனர். அனைவருக்கும் சிறப்பான வேலை வாய்ப்பு வழங்குகின்றனர். சிவகாசியில் உள்ள நிறுவனங்களில் உரிய ஊதியம், போனஸ், விடுமுறை அனைத்தும் வழங்கப்படுகிறது. இங்கு அனைவரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளோம் என தொழிலாளர்கள் கூறியுள்ளனர். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பீகாரை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. வதந்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்பட்ட நபர்களை பாருங்கள். திமுக அரசினால் பல பாஜ தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தான் பாஜவின் குணம். வதந்தி பரப்புதல், அதனை எதிர்க்கும் கட்சிகளை நிர்பந்தித்தல், இவை அனைத்தும் தேர்தல் ஆதாயங்களுக்காக தான். நாட்டின் மக்கள் இப்போது பாஜவின் திட்டங்களை புரிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வை கொண்டுள்ளனர்.
ஒருவரின் சொந்த மண்ணை வெளிநாட்டில் விமர்சிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை குறித்த தனது கவலையை வெளிப்படுத்துவதற்கு ராகுல்காந்திக்கு உரிமை உள்ளது என நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* கலெக்டரிடம் உறுதி விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், எஸ்பி னிவாச பெருமாள் ஆகியோரை ரித்து ஜெய்ஸ்வால் சந்தித்தார். அப்போது, ‘‘தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கின்றனர். இத்தகவலை பீகாருக்கு கொண்டு செல்வேன்’’ என்றார்.
* பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பி அதிரடி சிவகாசியில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்த ரித்து ஜெய்ஸ்வால், தொழிலாளர்களின் நிலையை பீகார் மக்கள் நேரடியாக அறியும் வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக பதிவு செய்தார். தொழிலாளர்களின் நிலையையும் அவர்களின் கருத்துக்களையும் ஒளிபரப்பினார்.