புதுடில்லி,புதுடில்லியைச் சேர்ந்த, ‘ஜேபி இன்ப்ராடெக்’ நிறுவனத்தை வாங்கும் திட்டத்துக்கு, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, ௨௦ ஆயிரம் பேருக்கு விரைவில் வீடு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜேபி இன்ப்ராடெக் நிறுவனத்தின் சார்பில், புதுடில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், இந்த திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதனால், வீடு வாங்க முன்பதிவு செய்திருந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில் ஜேபி நிறுவனத்தை, ௨௦ ஆயிரத்து ௩௬௩ கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு, ‘சுரக் ஷா ரியாலிட்டி லிமிடெட்’ மற்றும் ‘லக் ஷதீப் இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனங்கள் முன்வந்தன.
இதற்கான விண்ணப்பத்துக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், இந்த கையகப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வு தலைவர் நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மற்றும் உறுப்பினர்கள் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
காலநிர்ணயம் செய்து, வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்துவதை கண்காணிக்க, ஒரு நிபுணர் குழுவை ஒரு வாரத்துக்குள் அமைக்க வேண்டும்.
தினசரி அடிப்படையில் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால், வீடு வாங்க முன்பதிவு செய்துள்ள, ௨௦ ஆயிரம் பேருக்கு விரைவில் வீடுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்