பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று சாடினார். தொடர்ந்து பேசிய எச். ராஜா; அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களில் மத்திய அரசு சட்டம் இயற்றலாம் சில விஷயங்களில் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம், இதில் முரண்பாடு வரும் போது மத்திய அரசு எடுக்கும் முடிவுதான் செல்லும்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் 6 மாதத்திற்கு முன்பே தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துவிட்டார், ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஒருவரையாவது தமிழக அரசு கைது செய்ததா..? ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது..
சைபர் கிரைம் தொடர்பான விவவாகரத்தில் சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, இதைத்தான் ஆளுநர் கூறியுள்ளார்.
திரும்ப தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தாலும் அதனை ஆளுநர் குடியரசு தலைவருக்குத்தான் திருப்பி அனுப்புவார். அதிமுக பாஜக இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எடப்பாடி பழனிசாமியோ அண்ணாமலையோ எந்த கருத்தையும் கூறவில்லை. இரண்டு தரப்பினரும் ஒரு சிலர் கருத்து கூறினர். அந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கும். ராகுல் காந்தி நடைபயணம் போன்று அண்ணாமலை நடை பயணம் இருக்காது. அண்ணாமலை நடை பயணம் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். ராகுல் காந்தி நடை பயணம் சென்றார் காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை சமீபத்தில் நடந்த மூன்று சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்கள்.
ஈரோடு கிழக்கு கிடைத்ததில் 500 கோடி ரூபாய் செலவு செய்து விட்டு வெற்றி என்று கூறுவது தான் இந்த திராவிட மாடல். தேர்தலின் போது வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை தான் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையம் இவ்வளவு ரூபாய் நாங்கள் பதிவுகள் செய்துள்ளோம் என்று கூறினர். அரசியல்வாதியிடமிருந்து பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை
ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளராக செயல்பட்டவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார். ”சைபர் க்ரைம் விவகாரத்தில் மாநில அரசுக்கு சட்ட இயற்றவும் முடிவெடுக்கவும் அதிகாரம் இல்லை என்றால் தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மியை மத்திய அரசு ஏன் தடை செய்யக்கூடாது என்றும் சட்ட மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்குத்தான் மீண்டும் அனுப்புவார் என்றால் ஆளுநர் ஏன் அனுப்பாமல் உள்ளார்” என்ற கேள்விகள் எச். ராஜா மீது எழ தொடங்கியுள்ளது.