வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க் : உலக அளவில் உள்ள பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி ‘பிளாஸ்டிக்’ கழிவுகள் மிதந்து கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுதும் உள்ள கடல்களில் குவிந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அட்லான்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் 1979 – 2019 வரை சேகரிக்கப்பட்ட ஆய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன் விபரம்: உலக பெருங்கடல்களில் குவிந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் குறித்த விபரங்களை, 1990 வரை துல்லியமாக கணிக்க முடிந்தது. அதன் பின் 2005 வரை, கழிவுகள் குவிவதில் நிலையான தன்மை இல்லை. 2005க்கு பின் கழிவுகள் குவிவது மிக வேகமாகி உள்ளது.
இன்றைய நிலவரத்தில் உலக பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இந்த நிலை கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2040க்குள் இது மூன்று மடங்கு உயரும். உலகம் முழுதும் உள்ள கடற்கரைகளை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்குகின்றன. இதை கட்டுப்படுத்த சர்வதேச கொள்கைகளை உடனடியாக வகுப்பது அவசியம்.
சர்வதேச அளவில் 9 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கடலுக்குள் சென்றுவிட்டால் அவை மட்கி போகாமல், சிறு சிறு துண்டுகளாக பிரிகின்றன. இவற்றை சுத்தப்படுத்துவது சவாலான காரியம். வடக்கு அட்லான்டிக் கடல் பகுதியில் தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன. கடல் பகுதிகளை சுத்தம் செய்வது,
பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளை விட, பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை குறைப்பதே மாசு கட்டுப்பாட்டுக்கு தீர்வாக அமையும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement