இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுகின்றன. `ஹாங்காங் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் இந்தக் காய்ச்சலால் இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் இறுதிக்குள் வைரஸ் பரவல் குறையும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக H3N2 என்ற இன்ஃபுளூயன்ஸா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் அச்சன் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதான ஹிரே கவுடா என்ற முதியவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மார்ச் 1-ம் தேதி உயிரிழந்துள்ளார். அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்தான் இன்ஃபுளூயன்ஸா வைரஸால் முதலில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து ஹரியாவைச் சேர்ந்த 56 வயதான நுரையீரல் புற்றுநோயாளி ஒருவரும் இந்த காய்ச்சலால் பலியாகியுள்ளார். ஜனவரி மாதம் இன்ஃபுளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த புதன் கிழமை தன் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
“பருவகால இன்ஃபுளூயன்ஸா என்பது கடுமையான சுவாச நோய்த்தொற்று. இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகிறது. மேலும் உலகளவில், சில மாதங்களாகவே இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தக் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர் இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். நோயாளிகளுக்கு குமட்டல், தொண்டைப் புண், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளும் உள்ளதாகவும் இது ஒரு வாரம் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.