சிவாஜி பேரன் துஷ்யந்த் மீது 4 கோடி கடன் மோசடி வழக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், சக்சஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் போதிய வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பில் இருந்து விலகினார். தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். துஷ்யந்த் தனது மனைவி, அபிராமியுடன் இணைந்து ஈசன் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடித்த 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படத்திற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்த 'ஜகஜால கில்லாடி' படம் தயாரிக்கப்பட்டது.

இதற்காக எங்களது நிறுவனம் சார்பில் 4 கோடி ரூபாய் பல்வேறு தவணைகளில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 30 சதவீத வட்டியுடன் படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் இப்படத்தை முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி கடன் தொகையை திருப்பித் தரவில்லை.

2022ம் ஆண்டு ஜூலை மாதம்வரை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் தர வேண்டும். ஆனால் ரூ.41 லட்சத்து 85 ஆயிரத்தை மட்டும் வட்டியாக செலுத்தியுள்ளனர். நாங்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கும் பதில் அளிக்கவில்லை. சமரச ஒப்பந்தத்தையும் ஏற்கவில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குள்ள நற்பெயரை மனதில் வைத்தே துஷ்யந்த் நிறுவனத்துக்கு கடன் வழங்கினோம். எனவே இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஈசன் பட நிறுவனம், நடிகர் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி மற்றும் துஷ்யந்தின் தந்தை ராம்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 23ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.