சென்னை துரைப்பாக்கம் அருகில் மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவின் ஒரு பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மர்மநபர்கள் சிலர் இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து துரைப்பாக்கம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவமறிந்து வந்த போலீஸார், அந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்து துரைப்பாக்கம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அதில், உயிரிழந்த இளைஞர் சென்னை நீலாங்கரை, சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 20 வயதான முருகன் என்கிற கண்மூடி முருகன் என்பது தெரியவந்தது. நீலாங்கரை பகுதி காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது திருட்டு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
சம்பவம் நடந்த அன்று கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு அருகே முருகன் உட்பட நான்கு இளைஞர்கள் மது அருந்த வந்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் நடந்த தகராறில் முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸார் தேடிவருகிறார்கள்.