அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கோரி தெலங்கானா முதல்வரின் (KCR) மகள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் கலந்து கொண்டன.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் கேசிஆர் (சந்திரசேகர ராவ்) முயற்சி செய்துவருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான் ஆகியோரை அழைத்து பிரம்மாண்ட மாநாடு நடத்தினார்.
அதேபோல் ஒடிசாவின் ழங்குடியின தலைவரை வைத்து மாநாடு நடத்தினார். மேலும் மகாராஷ்டிராவிலும் மாநாடு நடத்தினார். இப்படியாக தேசிய அரசியலில் கால்பதிக்க பல்வேறு வழிகளில் தெலங்கானா முதல்வர் முயற்சி செய்து வருகிறார். இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள பெண்களை கவரும் வகையில், ஒரு சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அதாவது லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா தலைமையில், இன்று எதிர்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மகளிர் அமைப்புகள் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைக்க ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி, காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ‘‘ சுமார் 500-600 உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது ஈடுபடுகின்றனர். ஆனால் வருகை மிக அதிகமாக இருக்கும். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 18 அரசியல் கட்சிகள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன. 2010 ஆம் ஆண்டு முதல் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குளிர்பதனக் கிடங்கில் கிடக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மோடி அரசுக்கு வரலாற்று வாய்ப்பு இருக்கிறது.
2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மசோதாவை தனது அரசு கொண்டு வரும் என்று வாக்குறுதி அளித்தார். இது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதி. ஆனால் பாஜக தலைவர்கள் யாரும் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. பெரும்பான்மை பலம் இருந்தும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. மேலும் இது மிகவும் வருத்தமளிக்கும் பிரச்சினை.
ஆண்களுக்கு நிகராக பெண்களை கொண்டு தான் உலகம் முன்னேறி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது இந்தியாவில் நடக்கவில்லை. பிரதமர், அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் குறிப்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
‘உனக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் உயிரே’ – ஜாக்குலினுக்கு கிரிமினல் கடிதம்.!
மேலும், பெண்கள் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இந்தியா 148வது இடத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் 543 பெண் உறுப்பினர்களில் 78 பேர் மட்டுமே உள்ளனர், அதாவது 14.4 சதவீதம். துரதிர்ஷ்டவசமாக, இது உலக சராசரியை விட மிகக் குறைவு. அண்டை நாடான பாகிஸ்தானில் பெண்களுக்கு 17 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்தியாவை விட வங்கதேசத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகம்’’ என்று அவர் கூறினார்.