புதுடெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசில் அடிசி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கலால்துறை முறைகேடு வழக்கிலும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்கள். இதனால் டெல்லி ஆம்ஆத்மி அரசில் புதிய அமைச்சர்களாக அடிசி, சவுரப்பரத்வாஜ் ஆகியோரை நியமிக்க முதல்வர் கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதை ஏற்று ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டார்.
நேற்று அடிசி, சவுரப்பரத்வாஜ் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். டெல்லி கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் சக்சேனா 2 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் கெஜ்ரிவால், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ராம்சிங் பிதூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அடிசிக்கு கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம், சுற்றுலா ஆகிய துறைகளையும், பரத்வாஜ்க்கு சுகாதாரம், நகர்புற வளர்ச்சித்துறை, நீர், தொழிற்துறை உள்ளிட்ட துறைகளும் வழங்கப்பட்டன.