உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக தஞ்சை பெரிய கோவில் விளங்கி வருகிறது. இந்த கோயிலை சுற்றி பார்க்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இன்று முதல் தஞ்சை பெரிய கோயில் வளாகம் பிளாஸ்டிக் இல்லா பகுதி என்ற நிகழ்ச்சியை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், துணிக்கடை போன்ற கடைகளுக்கு 10,000 ரூபாய் அபராதமும், சிறிய கடைகளுக்கு 1000 ரூபாய் அபராதம் என முதல் தவணையாக விதிக்கப்படும். மேலும், தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.