பஞ்சாப் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழிபாடு

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழிபாடு செய்தார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒருநாள் பயணமாக அமிர்தசரஸ் நகருக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பகவந்த் சிங் மான், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து பொற்கோயிலுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் அங்கு வழிபாடு செய்து கீர்த்தனைகளை கேட்டார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஷிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு அமிர்தசரஸ் நகரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு அமிர்தசரஸ் வருவது இதுவே முதல்முறையாகும். அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

இங்குள்ள துர்கியானா கோவில், பகவான் வால்மீகி ராம் தீரத் ஸ்தலம் ஆகியவற்றிலும் அவர் வழிபாடு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.