பல்வேறு மின்சார இணைப்புகள் ஒரே இணைப்பாக மாற்றப்படுமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2.60 கோடி பேர் இணைத்துள்ளனர். 67 ஆயிரம் பேர் இன்னும் இணைக்கவில்லை. இவர்களின் வீடுகளுக்கு சென்று இணைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.

ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. சில பகுதிகளில் அதிகாரிகள் இதனைத் தவறாக புரிந்துகொண்டு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும் ஒரே இணைப்பாக மாற்றப்படாது. எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.

திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது.

24 மணி நேரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பணிகளை திமுக ஆட்சி செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு கோடைக் காலம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் தலா 1565 மெகாவாட் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் எட்டு ரூபாய்க்கு பெற முடியும். தமிழகத்தின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 2030-க்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் விவகாரத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்திய இளமின் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.