பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுடன் நாகாலாந்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 16ம் தேதி உள்ளாட்சி தேர்தல்!!

கோஹிமா : நாகாலாந்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 16ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாகாலாந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். வரும் மார்ச் 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதிகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுடன் வரும் மே 16ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாகாலாந்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நகராட்சி மன்றங்கள் மற்றும் 36 நகர சபைகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற ஏப்ரல் 3ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 10 கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 19ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. அண்மையில், நாகாலாந்து முதல்வராக 5-வது முறையாக என்டிபிபி மூத்த தலைவர் நெய்பியூ ரியோ (72) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கூட்டணியில் இல்லாத தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம் (ராம்விலாஸ்), இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நாகாலாந்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.