இந்திய-இலங்கை மன்றத்தின் பணிப்பாளர் சபையின் 38ஆவது அமர்வு 2023 மார்ச் 03 ஆம் திகதி பெந்தோட்டையில் நடைபெற்றது. இந்த அமர்வானது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கௌரவ மிலிந்த மொரகொட ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
இம்மன்றத்தின் உறுப்பினர்கள் தூதுவர் கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் தூதுவர் பேர்னாட் குணதிலகே ஆகியோரும் இந்த அமர்வில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2. பொருளாதாரம், விஞ்ஞானம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு, மற்றும் இரு நாடுகளினதும் மக்களிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துதல் ஊடாக இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக்கும் நோக்கத்துடன் இந்திய இலங்கை மன்றமானது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலமாக 1998ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம்திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
3. இம்மன்றத்தினால், கலை மற்றும் கலாசாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், சமூக பணிகள், அபிவிருத்தி ஆய்வுகள் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இம்மன்றம் இன்றுவரையில் 580க்கும் மேற்பட்ட பணித்திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளது. இந்திய-இலங்கை மன்றத்தின் ஆதரவுடன் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், இருதரப்பு உறவுகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். இந்த ஆண்டு, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து 98 திட்ட முன்மொழிவுகள் இதுவரை இம்மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் வரும் மாதங்களில் செயல்படுத்தப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
09 மார்ச் 2023