மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கூறி இருப்பதாவது: 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
மெட்ரோ ரயில் திட்டம்:
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு கேட்டுக்கொண்டதின் பேரில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது துவங்கப் பெற்று சுமார் 75 நாட்களில் நிறைவேற்றப்படும் என சென்னை மெட்ரோ ரயில் இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை-ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தலாம் என்றும், இதற்கிடையே 17 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதோடு, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்டப்பாலம் அமைத்து செயல்படுத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் போதிய
நிதியுதவி ஒதுக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சியில், மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகையில், மதுரை சக்கிமங்கலத்தில் அறிவிக்கப்பட்ட சிட்கோ புதிய தொழில் பூங்கா செயல்பாட்டிற்கான முயற்சிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதிய மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்
விரகனூர் சந்திப்பு, அப்போலோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் சந்திப்புகளில் புதிய மேம்பாலங்கள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய பணிகள் விரைவில் துவங்கப்பட இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். மதுரை-தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலை திட்டப்பணிகள் உடனடியாக நிறைவேற்றப்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இது தொடர்பான கோரிக்கை மனு, சென்னையில் நடந்த வணிகர் சங்கப்பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் வேண்டும்
தொழில் வர்த்தக சங்கத்தலைவர் மேலும் கூறுகையில், ‘மதுரை விமானநிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்கு, மேல்பகுதியில் விமான ஓடுதளமும், கீழ்பகுதியில் வாகனங்கள் செல்லத்தக்க வகையில் அண்டர்பாஸ் அமைக்கப்பட வேண்டும். கப்பல் மற்றும் விமான மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு போக்குவரத்துக் கட்டணம் மீதான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைவரி விலக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதம் என தற்போது உயர்த்தியுள்ளதால், தொழில் வணிகக்கடன்கள் மீதான வட்டி அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் ஏற்றுமதியாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தொழில், வணிக பணப்புழக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளார்.