கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் அவரது நண்பர் முகமது யூசுப் உள்ளிட்டோர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு கஞ்சா வழங்கிய ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது :-
“திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் காவல் நிலையத்தில் சரவணன் மற்றும் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு பல்லடம் அருகே உள்ள சின்னகரை சோதனை சாவடியில் சோதனை பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறைத்து சோதனை செய்துள்ளனர்.
அதில் சுமார் மூன்று கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சாவை கைப்பற்றி அதனை தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு கொடுத்துள்ளனர். இவர் அந்த கஞ்சாவை தேவகோட்டையைச் சேர்ந்தவரிடம் வீரப்பனை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் எஸ்பி பட்டினத்தைச்சேர்ந்த பிரவீன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பல்லடம் போலீஸ்காரர்கள் சரவணன் மற்றும் அருண்பாண்டியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்கள்.