கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை விசைத்தறியாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. அன்றையதினம் அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்.
தமிழக அரசு சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை, 1000 யூனிட்டாக கடந்த சில தினங்களுக்கு முன் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக, நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இரா.வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி கூறி, நாளை கருமத்தம்பட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பிதழை வழங்கினர். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு) ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார்.
அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். காலை 11 மணிக்கு பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹால் வளாகத்தில் மாற்றுகட்சியினர் இணையும் விழாவில் அதிமுக உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் செய்துள்ளார். இதைதொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். மாலை 5 மணிக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால் ரோடு அருகே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவிக்கு பின் மாலை 7 மணியளவில் விமானம் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார்.