வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் சீமான் போன்றோர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வந்தனர். அவர்கள் மீது வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசுபவர்களுக்கும், அது சம்பந்தமான வீடியோவை பரப்புபவர்களுக்கும் தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோவை பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் சீமான், ‛நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஹிந்திக்காரன் எல்லாம் ஒரே வாரத்தில் பெட்டியை கட்டிக்கொண்டு சென்று விடுவான். கஞ்சா வைத்திருந்தான், கற்பழிப்பு செய்தான், பாலியல் தொல்லை செய்தான் என ஒரு ஆயிரம் பேரை உள்ளே வைத்து சோறு போடாமல் செய்தால், அனைவரும் கையெடுத்து கும்பிட்டு கிளம்பி சென்றுவிடுவர்’ எனப் பேசுகிறார்.
இதனை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர், ‛வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையை தூண்டும் சீமான் போன்றோர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement