சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். பிரகாஷ் நேற்று முன்தினம் பிரியா (42) என்ற பெண்ணுடன் பெரியமேட்டிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். சில மணிநேரம் கழித்து, பிரியா அந்த விடுதி ஊழியர்களிடம் பிரகாஷ் மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த விடுதியின் மேலாளர், அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அந்த அறையில் பிரகாஷ் இறந்துகிடந்திருக்கிறார்.
உடனே, விடுதியின் மேலாளர் கபீர் அகமது இந்தச் சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். சம்பவமறிந்து வந்த போலீஸார் பிரகாஷின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாகச் சந்தேக மரண பிரிவில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், உடன் தங்கியிருந்த பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரியா முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லவே… போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதில், தான் கொலைசெய்ததை பிரியா ஒப்புக்கொண்டிருக்கிறார்.
திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழும் பிரியா, தற்போது தன்னுடைய இரண்டு மகன்களுடன் வசித்துவருகிறார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது, உடன் பணியாற்றிய பிரகாஷுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் திருமணமாகாத பிரகாஷுடன் பிரியா நெருக்கமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்திருக்கிறார்கள். அதுபோலவே, சம்பவம் நடந்த தினத்தன்றும் இருவரும் பெரியமேடு பகுதியில் அறை எடுத்து அங்கே ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திவிட்டு, தனிமையில் இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது ஆத்திரத்தில் பிரியா தாக்கியதில், மது போதையிலிருந்த பிரகாஷ் தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கிறார். பிரகாஷ் இறந்ததையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், `இருவரும் தூக்கிட்டு தற்கொலைசெய்ய முடிவுசெய்தோம். அவர் மட்டும் தூக்கிட்டு கீழே விழுந்துவிட்டார்’ எனச் சொல்லி அனைவரையும் நம்பவைத்துவிடலாம் என்று பிரியா நாடகமாடியிருக்கிறார். ஆனால், போலீஸாரிடம் பயத்தில் உண்மையைக் கூறிவிட்டார். பிரியாவைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.