3 மடங்கு உயர்ந்த 'விடுதலை' பட்ஜெட்: வெற்றிமாறன் தகவல்

ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ , கவுதம் மேனன், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது: 'விடுதலை' படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் 'வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதி குவித்து இருக்கிறார்.

நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமைதான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும். இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்துக்கு முதலில் 4 கோடி ரூபாய் தான் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பற்றி சொன்னேன். ஆனால், அதையும் தாண்டி மூன்று மடங்கு வரை போய்விட்டது. அதை எல்லாம் கேட்காது இந்த படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது முக்கியமானது.

சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுத்துக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றிதான் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார்.

சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம். வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு 'விடுதலை' போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது. கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததை விட ராஜீவ் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார். இந்த கதை என்னுடைய விருப்பம் தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும் வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.