தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கோவை வருகை புரிந்துள்ளார். மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.
ஏற்கெனவே கடந்தாண்டு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த 55,000 பேரை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தியிருந்தார்.
இன்றைய நிகழ்ச்சியை பொருத்தவரை, இது அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் 3,000 பேர் திமுகவில் இணைய இருப்பதாகத்தான் சொல்லப்பட்டது. கடைசி நேரத்தில் 10,000 பேர் இணைய இருப்பதாக மேடையில் இருந்த பேனரிலேயே எழுதி வைக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியும் 10,000 பேர் இணைவதாகத்தான் தன் ட்விட்டர் பதிவில் கூறிவந்தார். ஒருங்கிணைந்த திமுக கோவை மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்தும், இருக்கைகள் முழுவதுமாக நிரம்பவில்லை.
கடைசியில் சில இருக்கைகளை காலியாகவே இருந்தன. ஸ்டாலின் வருவதற்கு சில நிமிடங்களே இருக்கே, அந்த காலி இருக்கைகள் அப்படியே தூக்கி ஓரமாக வைக்கப்பட்டன. முதல்வர் தன் உரையில் ஏறக்குறைய 4,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைகிறார்கள் என்றே குறிப்பிட்டார். நிகழ்ச்சி ஏற்பாடு என்பதால் ஸ்டாலின் பேச்சில் செல்வராஜ் குறித்து அதிகம் புகழ்ந்தார்.
பொதுவாக திமுக போஸ்டர், பொதுக்கூட்ட மேடைகளில் அமைச்சர் உதயநிதி படம் தவறாமல் இடம்பிடிப்பது வழக்கம். ஆனால் இன்றைய கூட்டத்தின் மேடையில் உதயநிதி படம் இடம்பெறவில்லை. பெரியார், அண்ணா படங்கள் சிறியளவிலும் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் பெரியளவிலும் இடம்பெற்றிருந்தன.
அதேநேரத்தில் ஸ்டாலின் கண்ணில் நேரடியாக படும்படி மேடைக்கு நேர் எதிரே கடைசியில் தலைவர்கள் படத்துடன் உதயநிதி படத்தை வைத்திருந்தனர். இணைந்தது மட்டுமல்ல நிகழ்ச்சியை நடத்தியதிலும் சீனியர் உடன்பிறப்புகளைவிட, சமீபத்தில் திமுகவில் இணைந்தவர்களின் கையே ஓங்கியது. உடல்நலக்குறைவால் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஓய்வில் இருந்தார்.
மற்ற இரண்டு மாவட்ட செயலாளர்களான தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி அமைதியாகவே இருந்தனர். தன்னுடைய நிகழ்ச்சி என்பதாலேயே கோவை செல்வராஜ் மேடையில் ந்டப்பதும், மைக்கில் வந்து பேசுவதுமாக இருந்தார். முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் மேடைக்கு வந்து ஓரமாக நின்றுவிட்டனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், முன்னாள் எம்பி நாகராஜ், அதிமுகவில் கோவை மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினியின் கணவர் செந்தில் கார்த்திகேயன், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன் ஆகியோர் தான் மேடையிலும், மேடைக்கு கீழும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இதில் ஆறுக்குட்டி டீம் தங்களது பெயரை சொன்னால் கைத்தட்டி ஆரவாரம் செய்ய தனியாக ஒரு குழுவை அழைத்து வந்திருந்தனர்.
செந்தில் பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சராக பதவியேற்றதில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு பலமுறை வந்துவிட்டார். அவர் ஒவ்வொரு முறை கோவை வரும்போதும் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகும். கடந்த முறை தீவிரமாக முயற்சி செய்தும் முன்னாள் மாண்புமிகுகளை மட்டுமே இழுக்க முடிந்தது. இந்தமுறை அதுவும் முடியாமல், பெயரளவுக்கு சில உள்ளூர் நிர்வாகிகளை மட்டுமே இணைக்க முடிந்தது.