டெல்லி,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது.
இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 90 பேர் இந்த வகை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதில் கர்நாடகாவில் 26 பேருக்கு ‘எச்3.என்.2’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கடந்த 6-ந்தேதி தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா, அரியானாவில் தலா ஒருவர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ளும்படி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்படி மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.