மதுரை: மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் நடைபெற்று வந்த பால் நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு பால் உற்பத்தி செய்து கொடுக்கும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்தனர். மதுரை ஆவினில் 18,000 பால் உற்பத்தியாளரிடமிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,90,000 லிட்டர் பால் வழங்கப்படும். இந்நிலையில், ஆவினில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.31-லிருந்து ரூ.33-க்கு உயர்த்தப்பட்டு பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலையாக ரூ.42 வரை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றனர். தனியாருக்கு நிகராக ஆவின் நிர்வாகமும் ரூ.7 கூடுதல் விலை வழங்கி பால் கொள்முதல் செய்யவேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்கும் வரை பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்கமாட்டோம் என இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆவின் நிர்வாகம் கூடுதல் பாலுக்கு கூடுதல் விலை வழங்கக்கோரி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளதால் மதுரையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் நடைபெற்று வந்த பால் நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.