ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்.
நடப்பு ஆண்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டமும், அது சார்ந்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகின்றன. பெண்களின் அனுமதி இல்லாமலேயே கண்ட இடங்களில் கை வைப்பது கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், சிறுமி என்றும் பாராமல் அவளுடைய அந்தரங்க உறுப்புகளில் வண்ணப் பொடியை பூசுவதும் முத்தம் கொடுப்பதும் பதிவாகியுள்ளது.
முன்னதாக 6 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோக்களும் தற்போது வைரலானது. வெளிநாட்டு பெண் ஒருவர் தனது வீடியோவில், ஆண் நபர் எனது உள்ளாடைக்குள் கைவிட்டு மார்பில் வண்ணப்பொடி தடவியதாக கூறுகிறார். அதேபோல் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இன்னொரு தம்பதியிடமும் ஹோலி கொண்டாட்டத்தில் ஆண்கள் அத்துமீறியுள்ளனர்.
கணவர் முன்பே மனைவியை கண்ட இடங்களில் தொடுவதும், கட்டி அணைப்பதும் கணவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோக்களில் வரும் நிகழ்வுகள் தற்போது நடைபெறவில்லை என்றாலும், ஹோலி பண்டிகையில் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதை முகத்தில் அறையும் விதத்தில் கூறுகிறது.
அதன்காரணமாகத்தான், ஹோலி பண்டிகையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல் குறித்து பாரத் மேட்ரிமோனி என்ற திருமண தகவல் மையம் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டது. வீடியோவில் பெண் ஒருவர் தனது மேல் பூசப்பட்ட வண்ணப்பொடிகளை நீரில் கழுவுகிறார். கழுவியபின்பு அவரது வாய், கண்கள், கன்னம் என முகம் முழுவதும் காயங்களால் நிரம்பியிருக்கின்றன. இந்த விழிப்புணர்வு வீடியோ வெளியானதும், வலதுசாரி இந்துத்துவவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. பாரத் மேட்ரி மோனியை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
அதேபோல் பாஜக ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பும் இந்த ஹோலி பண்டிகையில் வெளிப்பட்டுள்ளது. முஸ்லீம் பெண்கள் மீது, முட்டை அடிப்பதும், வண்ணப்பொடியை தூவுவதும் என கொடுமையில் ஈடுபட்டதும் வீடியோக்களாக வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் ஹோலி கொண்டாட்டத்தில் மானபங்கபடுத்தப்பட்டதை தொடர்ந்து ஜப்பான் பெண் பயணி ஒருவர், இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவிற்கு பயணம் வந்துள்ளார். இந்தநிலையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட தினத்தில் அவர் டெல்லியில் தெருக்களில் வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது அவரை நெருங்கிய கும்பல் ஒன்று அவரது அனுமதி இல்லாமல், அவர் முகத்தை அழுத்தி பிடித்து வண்ணப் பொடியை பூசுவது, முட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண் விலக நினைத்தும் ஆண் கும்பல் அவரை இழுத்து பிடித்து இழிசெயலை செய்துள்ளனர். மேலும் அவர் விலகி சென்ற நிலையில் ஆண் நபர் ஒருவர், ஜப்பான் இளம்பெண்ணின் மார்பகத்தை தொட நினைக்கும் போது அவரை கன்னத்தில் அறைகிறார் அந்த இளம்பெண். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்தன.
பிரசாந்த் உம்ரா: இங்க எதுக்கு வந்தீங்க? ஜாமீன் வேணுமா… தமிழ்நாட்டுக்கு போங்க!
அதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீது டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவன் என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண், இந்தியாவைவிட்டு வெளியேறி பங்களாதேஷிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச நாடுகள் முன்பு இந்தியாவிற்கு தலைகுணிவை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.