Oscars 2023: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில், 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த 95ஆவது ஆஸ்கார் விழா, இந்திய நேரப்படி வரும் மார்ச் 13ஆம் தேதி காலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது. அந்த வகையில், ஆஸ்கார் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறிந்துகொள்வோம். ஆஸ்கார் விருதுகளில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சிறந்த நடிகைக்கான விருது கருதப்படுகிறது. ஆஸ்கார் வரலாற்றில் பல நடிகைகள் ஒருமுறைக்கு மேல் அகாடமியின் மிக உயர்ந்த பரிசைப் பெறும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகளாக இருந்துள்ளனர்.
100 சதவீத வெற்றி
1933, 1967, 1968, மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் முறையே ‘மார்னிங் குளோரி’, ‘கெஸ் ஹூ’ஸ் கம்மிங் டு டின்னர்’, ‘தி லயன் இன் வின்டர்’ மற்றும் ‘ஆன் கோல்டன் பாண்ட்’ ஆகிய படங்களில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுகளைப் நடிகை கேத்தரின் ஹெப்பர்ன் வென்றிருந்தார். இவர்தான் அதிக முறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்றவராவார்.
ஃபிரான்சஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகை விருதுகளை மூன்று முறை பெற்றுள்ளார். அதே நேரத்தில் அந்த மூன்று முறை மட்டுமே அவர் அந்த பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். எனவே, இதை 100 சதவீத வெற்றி விகிதம் என குறிப்பிடலாம்.
பிற நடிகைகள்
– மெரில் ஸ்ட்ரீப் 17 ஆஸ்கார் விருதுகளுக்க பரிந்துரைக்கப்பட்டார். இந்த பிரிவில் அதிக முறை பரிந்துரைக்கப்பட்டவர் என்ற சாதனை படைத்த அமெரிக்க நடிகை இவர்தான்.
– 1986ஆம் ஆண்டு ‘சில்ட்ரன் ஆஃப் எ லெஸ்ஸர் காட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக 21 வயதான மார்லி மாட்லின் இளம் வயதில் இவ்விருதை வென்றவராவார். 1990இல் ‘டிரைவிங் மிஸ் டெய்ஸி’க்காக 80 வயதில் ஜெசிகா டேண்டி வென்றார். அதிக வயதில் இவ்விருதை பெற்றவர் இவர்தான்.
– 2001ஆம் ஆண்டில் ஹாலே பெர்ரி, ‘மான்ஸ்டர்ஸ் பால்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றார். இவர்தான் இவ்விருதை வென்ற ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை ஆவார்.
– சோபியா லோரன் 1961இல் ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்தில் முதன்முறையாக இவ்விருதை வென்றவராவார்.