சமீபகாலமாகவே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள்,
அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர், பிரதமர் மோடிமீது பல விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவும் அமலாக்கத்துறையின் இந்த சோதனை மற்றும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருக்கிறார்.
அகமதாபாத்தில் நேற்றைய தினம் (11-3-23) பத்திரிகையாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “கடந்த காலங்களில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களை நான் பலமுறை சந்திக்க நேரும்போது அவர்கள், `சி.பி.ஐ ரெய்டை எதிர்கொள்ளவில்லை என்றால்தான் எங்களுக்கு வருத்தமாக இருக்கும்’ என்பார்கள். குஜராத் மக்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியும். வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ ஆகியவை ‘ஜனநாயகத்தின் பரீட்சை’. இந்தத் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறவேண்டும். இந்தச் சோதனை நடவடிக்கைகளில் காங்கிரஸின் பாணியையே பா.ஜ.க-வும் பின்பற்றுகிறது.
அன்று காங்கிரஸ் தொடங்கிய இந்த கலாசாரத்தையே இன்று பா.ஜ.க-வும் பின்தொடர்ந்து வருகிறது. இந்த சி.பி.ஐ, வரிமானவரி, அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம் பா.ஜ.க-வுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை. ஆனால் பா.ஜ.க-வின் பெயரை இழுத்தால் ரெய்டுகள் வரும். அது யாராயினும், அவர்களுக்கு தற்போதைய காங்கிரஸ் பிரமுகர்களின் நிலையே.
மேலும் சி.பி.ஐ, வரிமானவரி, அமலாக்கத்துறை ஆகியவை அரசின் கண்காணிப்பின்கீழ் இயங்கக் கூடியவை. இன்றைக்கு காங்கிரஸ் இதனால் தடுக்கி விழுகிறது என்றால், நாளை பா.ஜ.க அதே இடத்துக்கு வரலாம். கடந்த காலங்களில் நான் பலமுறை குஜராத் வந்திருக்கிறேன். இங்கு பிறந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி, அகிம்சையை பின்பற்றுவதாக சபதம் செய்தார் என்பதை, ஒவ்வொரு முறையும் இந்த நிலம் எனக்கு ஒரு செய்தியாக அனுப்பும்.
இந்தியா அந்த வழியைப் பின்பற்றி சுதந்திரம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் அரசியலில் இருந்தவர்களும் தங்கள் வாழ்க்கையில் இந்தக் கொள்கைகளைப் ஏற்று பின்பற்றி வந்தனர். இதுவே அகிம்சை மற்றும் உண்மையின் பாதையாக இருந்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் இந்தப் பாதைகளை மறந்துவிட்டனர். அவர்கள் உண்மையின் பாதையை பின்பற்றுவதில்லை” என்றார்.