கோவை: இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபடப் போவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா, சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவரது முன்னிலையில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்த 4 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது அவர் பேசியதாவது: சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கை தான் காரணம். வரும் மக்களவைத் தேர்தலில் இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.
நம்முடைய இலக்கு மக்களவைதேர்தல்தான். கடந்த முறை மக்களவை தேர்தலில் ஒரேஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய மக்களவைத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது. புதுச்சேரியையும் சேர்த்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இது ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான, அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப் போகிறோம். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.
ஸ்டாலின் பிரதமராவார்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, முதல்வர் ஸ்டாலின், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி. மு.பெ.சாமிநாதன், காந்தி, கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் தொ.அ.ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, மேயர் கல்பனா, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், வி.சி.ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெசவாளர்கள் பாராட்டு விழா: இதைத் தொடர்ந்து நேற்று மாலை, தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா கோவை கருமத்தம்பட்டியில் நடந்தது.
இதில் முதல்வர் பேசியதாவது: மேற்கு மண்டலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தறி தொழிற்சாலைகளுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டு, இவற்றுக்கான அனைத்து பொதுகட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும். ஒற்றுமையாக அனைத்து மக்களும் வாழக்கூடிய மாநிலம்தான் தமிழ்நாடு. அதை சிதைக்க சிலர் முயற்சிக்கின்றனர். வதந்திகள் மூலமாக பொய்களை பரப்பி இந்த ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். அவை எழுந்த வேகத்தில் அமுக்கப்பட்டு விடுகின்றன.
அனைவருக்கும் இந்த ஆட்சி தினமும் செய்து வரும் நலத்திட்ட உதவிகளில் இருந்து மக்களை திசை திருப்ப அவர்கள் செய்யக்கூடிய தந்திரங்கள் தான் இதுபோன்ற பொய்களும், வதந்திகளும். இதற்கு நான் அஞ்ச மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, காந்தி, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், எம்எல்ஏ ஈஸ்வரன், எம்.பி கு.சண்முகசுந்தரம், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.