மதுரை விமான நிலையப் பேருந்தில் பயணிக்கும் பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, அதே பேருந்தில் வந்த பயணி ஒருவர் ஒருமையில் விமர்சித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் குறித்து இன்று அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் பேசியதாவது, “சிங்கப்பூரில் இருந்து அரை போதையில் வந்த ஒருவன், ஒருமையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விமர்சிக்கிறான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறையினருக்கே இங்கு பாதுகாப்பு இல்லை.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வர பயணிக்கும் பேருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் கூட அமராமல், எளிமையாக நின்றார். எதிரே நின்று அரை போதையில் ஒருமையில் பேசினான். காந்தியாக இருந்தாலும், அவனை தாக்கியிருப்பார். ஆனால் எங்கள் தலைவர் அமைதி காத்தார்.
உதயகுமார் அவர்களை அழைத்து, தொண்டர்கள் காத்திருக்கிறார்கள், கோவிலையும் நடை அடைத்துவிடுவார்கள். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். அதன் அடிப்படையில் நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால் அதனை ஏன் வழக்காக பதிவு செய்யவில்லை?
நம் கொடுத்த வழக்கை எடுத்துக் கொள்ளாமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, அந்த ரவுடிக்கு ஆதரவாக, அவனை புகார் எழுதிக் கொடுக்கச் சொல்லி வழக்கு பதிந்திருக்கிறார்கள். அதனால் தான் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை உள்ளது என்கிறோம்” என செல்லூர் ராஜு பேசியுள்ளார்.