திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நல்லாரி கிரண்குமார். இவர் ஆந்திரா, தெலங்கானா என மாநிலம் 2ஆக பிரிக்கப்பட்ட பிறகு சமக்கிய ஆந்திரா (ஒருங்கிணைந்த ஆந்திரா) என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து நடந்த தேர்தலில் ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதன் பின்னர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். ஆனால் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார்.
ஆந்திரா, தெலங்கானாவில் ராகுல்காந்தி பாரத் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது கூட கிரண்குமார் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் கிரண்குமார் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் ஐதராபாத் வருகையின்போதோ அல்லது இந்த வாரத்திலோ டெல்லி சென்று பாஜவில் இணைவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த கிரண்குமார் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆந்திராவில் பாஜகவுக்கு மூத்த தலைவர் தேவை என்பதால் கிரண்குமாரை பாஜகவில் சேர்க்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் அவரை பாஜகவில் இணைத்து தேசிய அளவில் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.