திருமலை: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சைலம் மல்லிகார்ஜூன சுவாமி கோயில் நல்லமலா வனப்பகுதிக்கு அருகே உள்ளது. கோயில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை வனத்துறை- மாநில இந்து அறநிலையத்துறைக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் இருந்து வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எம்எல்ஏ ஷில்பா சக்கரபாணி, வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வனத்துறை தலைமை வன பாதுகாவலர் மதுசூதன் மூத்த அதிகாரிகளை நியமித்தார். கோயிலின் உண்மை தன்மைகளை கண்டறிய தொல்லியல் துறையின் உதவியை பெற்றார். நிலம் கணக்கெடுப்புக்காக வருவாய் துறை, வனத்துறை, அறநிலைய துறை, நில அளவை மற்றும் நில பதிவு அலுவலர்களுடன் கூடிய குழுவும் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வில் உயர்மட்ட தொழில்நுட்ப ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டது. பல மாத ஆய்வுக்கு பிறகு நிலம் கோயிலுக்கே சொந்தம் என்று உறுதிப்படுத்தியது. கோயில் அதிகாரிகளுடன் நிலத்தை ஒப்படைக்க முறையான ஒப்பந்தத்தில் வனத்துறை கையெழுத்திட்டுள்ளது.