டெல்லி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்த மசோதா இயற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை கவர்னர் சமீபத்தில் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக எம்பி டிஆர் பாலு நாடாளுமன்ற செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டவர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்ததால், இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.