சமால்கா: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பெண்களை அதிகளவில் பங்கேற்க செய்வது குறித்து அரியானாவில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் உள்ள சமால்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன. அடுத்தாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்று பேசிய அதன் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, ‘‘தற்சார்பு இந்தியா, நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு நிறைவை நினைவுரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. பெண்களின் அனைத்து வகை முன்னேற்றத்துக்காக ராஷ்டிரிய சேவா சங்கத்தின் மகளிர் பிரிவு பணியாற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ் நடத்தும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பெண்களை அதிகளவில் பங்கேற்க செய்ய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு லட்சம் கிளைகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2022ம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர 7.25 லட்சம் இளைஞர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர்,’’ என்று கூறினார்.