கொச்சி,’கேரளாவின் கொச்சி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, இன்னும் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வீர்கள்’ என கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு,கொச்சி அருகே பிரம்மபுரம் என்ற இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது; இது நாட்டில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய குப்பை கிடங்கு. இங்கு கடந்த 2ம் தேதி தீப்பற்றியது. 10 நாட்களுக்கு மேலாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
அந்தப் பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்து மக்கள் மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இந்நிலையில், குப்பை கிடங்கு தீ விபத்து தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. கொச்சி மாநகராட்சி அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
அப்போது நீதிபதிகள், ‘இன்னும் எத்தனை நாட்கள் நச்சுப்புகையால் மக்கள் அவதிப்பட வேண்டும். இதை அணைக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வீர்கள்’ என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பிரம்மபுரம் குப்பை கிடங்கில் தீப்பற்றியவுடன் அதை ஆறு மண்டலங்களாக பிரித்து தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
‘நான்கு மண்டலங்களி தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. இரண்டு மண்டலங்களில் தீயணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.
இதையடுத்து, தீயணைக்கும் பணியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டர், சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்