புதுடில்லி :இயற்கை உரம் தயாரிப்பில் கோசாலைகளின் பங்களிப்பு குறித்து, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் சிறப்பு பணிக் குழு நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிடி ஆயோக் அமைப்பு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை உரங்கள் உற்பத்தி தொடர்பாகவும், அதற்கு உதவும் கோசாலைகளின் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு பணிக் குழு, நாடு முழுதும் ஆய்வுகளை நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதை, நிடி ஆயோக் அமைப்பின் வேளாண் துறை உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் வெளியிட்டார்.
இது குறித்து, சிறப்பு பணிக் குழுவின் உறுப்பினர் செயலரான, நிடி ஆயோக் அமைப்பின் வேளாண் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் நீலம் படேல் கூறியுள்ளதாவது:
நம் நாடு பாரம்பரியமாகவே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தது. கால்நடை வளர்ப்பு, வேளாண் துறையுடன் சார்ந்ததாகவே இருந்தது. பசுக்களின் சாணம், சிறுநீர் ஆகியவை விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டன.
கழிவுகளை சிறந்த முறையில் கையாண்டு, அதை மீண்டும் மறுசுழற்சி செய்து வந்தனர்.
இது, விவசாயிகளின் பொருளாதாரத்துக்கு உதவியதுடன், இயற்கையும் பாதுகாக்கப்பட்டது. ஆனால், ௫௦ ஆண்டுகளுக்கு மேலாக இதில் இருந்து மாறி, ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதனால், நம் விவசாய நிலங்களின் உற்பத்தி திறன் குறைந்து வந்துள்ளது. இதில் இருந்து மண்ணை காப்பாற்ற, இயற்கை உரத்துக்கு மாற வேண்டும்.
இதில், கோசாலைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், மின்சார உற்பத்திக்கும் மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் பயன்படுகிறது.
இந்த கோசாலைகள், பொருளாதார ரீதியில் வலுவாக இருப்பதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்