சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கார் ஒன்று சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து கருகியது. இதில் பயணித்த 4 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிகில் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், குடும்பத்தினருடன் காரில் திருவனந்தபுரத்திற்கு சென்று விட்டு இன்று மீண்டும் சென்னை நோக்கி பயணித்துள்ளார். அப்போது கார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த உசேன்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவேு உள்ள தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது காரினுள் இருந்த நிகில், அவரது மனைவி காவியா, மகள்கள் சிவகங்கா மற்றும் சிவாத்மயா ஆகியோர் காரில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர்.
இதைக்கண்ட அவ்வழியே சென்றோர் அவர்களை மீட்க போராடிக் கொண்டிருக்கையில் கார் தீ பிடிக்கத் துவங்கியுள்ளது. பின்னர் மிகுந்த போராட்டத்திற்கு இடையே காரில் இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் போலீஸார் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படையினர் தீ பிடித்து எரிந்த காரை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தீ விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் தீப்பிடித்த சம்பவத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றப்பட்டு, தீயில் கருகிய கார் அணைக்கப்பட்டதும், போக்குவரத்து சரி செய்யப்பட்டது.