புதுடெல்லி: ஊழல் அரசியல்வாதிகளை சுத்தம் செய்யும் வாஷிங் மிஷினாக பாஜக மாறிவிட்டது என்று ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா காட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதாவிடம், இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ராகவ் சதா கூறுகையில், ‘ஊழல் அரசியல்வாதிகளை சுத்தம் செய்யும் வாஷிங் மிஷினாக பாஜக மாறிவிட்டது. இந்தியாவை எதேச்சதிகார நாடாக மாற்ற பாஜக விரும்புகிறது. அரசியல்வாதிகளான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், அபிஷேக் பானர்ஜி, சஞ்சய் ராவத், ஃபரூக் அப்துல்லா, டி.கே.சிவக்குமார், கே.கவிதா, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பாஜகவுடன் கைகோர்த்து பயணித்தால் அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும்.
அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேற்குவங்கத்தின் சுபேந்து அதிகாரி, முகுல் ராய், மகாராஷ்டிரா நாராயண் ரானே ஆகியோர் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாக இருந்தபோது அவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவர்கள் பாஜகவில் சேர்ந்த பின்னர், அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன. தற்போது அவர்கள் பெரும் பதவிகளில் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளனர். சமீபத்தில் கர்நாடகா பாஜக எம்எல்ஏவிடம் இருந்து ரூ.8 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அவர் மீதான நடவடிக்கை இல்லை. ஆனால் அவர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். இந்தியாவை ஒரு கட்சி, ஒரே தலைவர் நாடாக மாற்ற பாஜக விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டினார்.