எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நடந்தது? மதுரை ஏர்போர்ட் சம்பவம்… செல்லூர் ராஜூ பேட்டி!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் அவதூறாக பேசிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியான லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர்.

எடப்பாடி மீது அவதூறு

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் எனக் கூறினார். உடனே எடப்பாடியின் பாதுகாவலர் வேகமாக வந்து செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

யார் இந்த ராஜேஸ்வரன்?

பின்னர் காவல்துறையினரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரை பற்றி விசாரிக்கையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது மகன் என்று தெரியவந்தது. சிங்கப்பூரில் கட்டட வேலை செய்து வரும் இவர், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதற்காக விமானம் மூலம் மதுரை வந்திறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் மாவட்ட செயலாளர் எனக் கூறப்படுகிறது.

செல்லூர் ராஜூ பேட்டி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சிவகங்கை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக

நேற்று புறப்பட்டு மதுரை வந்தார். விமானத்தில் இருந்து பேருந்தில் ஏறி விமான நிலையம் வரை வருகை புரிந்தார். அப்போது முன்னாள் முதல்வரை, எதிர்க்கட்சி தலைவரை ஒருமையில் பேசுகிறார்.

மிகவும் மோசமான பேச்சு

அந்த வீடியோவை ஊடகங்களில் நேற்றைய தினம் ஒளிபரப்பினீர்கள். எவ்வளவு அசிங்கமாக பேச முடியுமோ? அந்த அளவிற்கு பேசினார். எந்த ஒரு மனிதரும் உணர்ச்சி வசப்படுவீர்கள். ஆனால் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் பொறுமையாக இருக்கிறார். அந்த நபர் சொல்வதை எல்லாம் கேட்காதது போல் நிற்கின்றார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து கூச்சல் போடுகிறார்.

அப்படியே பயந்து போய்விட்டோம்

இந்த சூழலில் எடப்பாடியாருக்கு ஒரே ஒருவர் தான் காவலர். அவர் சென்று செல்போனை ஆஃப் செய்கிறார். இதுதான் நடந்த சம்பவம். விமான நிலையம் வந்தவுடன் அந்த நபர் முன்னாள் வருகிறார். அடுத்து சண்டையில் ஈடுபடுகிறார். அவர் ஏதேனும் ஆயுதங்கள் வைத்திருக்கிறாரா? எனத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் பயந்து போய்விட்டோம்.

வழக்கறிஞர் உடன் ஆலோசனை

எடப்பாடியார் வந்ததும் நாங்கள் வரவேற்பு கொடுத்தோம். போலீசார் கெடுபிடி காட்டி விட்டனர். நான், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர். ராஜன் செல்லப்பா வரவில்லை. அடுத்தகட்டமாக வழக்கறிஞர் உடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.