திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவாவில் விவசாயத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜிஷா மோள் (38). கடந்த சில தினங்களுக்கு முன் ₹500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் இவரை போலீசார் கைது செய்தனர்.
எடத்துவா பகுதியை சேர்ந்த ஒரு வியாபார நிறுவனத்திலிருந்து ஆலப்புழாவில் உள்ள ஒரு வங்கியில் ₹50 ஆயிரம் பணம் முதலீடு செய்யப்பட்டது. அதில் இருந்த ₹500 நோட்டுகளில் 7 நோட்டுகள் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.
இது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நோட்டுகளை கொடுத்தது விவசாயத்துறை பெண் அதிகாரி ஜிஷா மோள் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனக்கு மன நல பாதிப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறியதால் தற்போது இவர் திருவனந்தபுரம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஜிஷா மோள் புழக்கத்தில் விட்ட 500 நோட்டுகள் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்த நோட்டுகள் அனைத்தும் உண்மையான நோட்டுகளைப் போலவே இருப்பது தெரியவந்துள்ளது.
அதை யாராலும் எளிதில் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு உள்ளது. எனவே இதில் சர்வதேச கள்ளநோட்டு கும்பலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகள் தான் இந்த அளவுக்கு ஒரிஜினலைப் போலவே இருக்கும்.
இதனால் இந்த வழக்கை கேரள தீவிரவாத தடுப்பு படையிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே ஜிஷா மோளுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்தவர் ஆலப்புழாவை சேர்ந்த ஒரு நபர் என தெரியவந்துள்ளது. அவர் இன்னும் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.