நாகப்பட்டினம்: காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக மதுரைக்கு மாலை நேரத்தில் ரயில்கள் இயக்க வேண்டும் என நாகப்பட்டினம் எம்பி செல்வராசு கூறினார். நாகப்பட்டினம் எம்பி செல்வராசு, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் சின்காவுடன் எம்பிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் நாகப்பட்டினம் எம்பி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகள் முன்வைத்து கூறியதாவது: கம்பன் விரைவு எக்ஸ்பிரஸ் உடனடியாக இயக்க வேண்டும்.
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் பணியாளர் நியமனம் ரயில்கள் இயக்கம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. நாகப்பட்டினம் தொகுதி அதிக அளவில் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் ஆகியோர் சராசரி வருமானம் உள்ளவர்களை உள்ளடக்கியது. திருவாரூர், நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நன்னிலம், நாகூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் ரயில் பயணம் செய்ய எந்த ஒரு ரயிலும் இயக்கப்படுவதில்லை. எனவே இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்க வேண்டும். இப்பகுதிகளில் இருந்து தான் நெல், அரிசி, உப்பு, நிலக்கரி போன்ற முக்கியமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து தான் அதிகமான வருவாயை தருகிறது. ஆனால் இப்பகுதிகளுக்கு ரயில் இயக்க மட்டும் ஆர்வம் காட்டப்படுவதில்லை.
காரைக்காலில் இருந்து தினமும் ஏராளமான நிலக்கரியை ஏற்றிக் கொண்டு செல்லும் சரக்கு ரயில்களை அனுமதிக்கின்றார்கள். ஆனால் பயணிகளின் சேவைக்காக ஒரு ரயில் கூட இயக்க முன் வருவதில்லை. பல ஆண்டுகளாக கோரப்படும் காரைக்காலில் இருந்து காலை நேரத்தில் திருச்சி அல்லது காரைக்காலில் இருந்து மாலை நேரத்தில் மதுரை வரை இயக்க வேண்டும்.
விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலை உடன் இயக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து கம்பன் விரைவு ரயில் என்ற பெயரில் மீண்டும் இரவு நேரத்தில் சென்னைக்கு ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையில் உடன் ரயில் இயக்க வேண்டும். கொரடாச்சேரி, கீழ்வேளூர், பேரளம், முத்துப்பேட்டை ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களுக்கும் நின்று செல்ல வேண்டும். நாகப்பட்டினம் ரயில் நிலையம் நடைமேடை சீர்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும் என்று கூறினார்.