ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. மேலும் அவர்களது லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட்டில் கேமராவை பொருத்திக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸாருக்கு சைகை காட்டி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
விசாரணையில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 6 பேர் பைக் ரேஸில் ஈடுபட்டதும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோரும் விரைந்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மாநகரப் பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று விபத்தை ஏற்படுத்தி அந்த நபர் இறந்து விட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது கொலைக்கு நிகரான குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சாகசத்தில் ஈடுபடுவது கூடாது என்று போலிஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது தவிர இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலிஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும், புதிய வாகனங்கள் வாங்கி அதில் கூடுதல் வேகத்திற்காக சில பாகங்களை பொருத்திக் கொடுக்கும் கடைகள் மீதும் வழக்கு பதிவு செய்து ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
newstm.in