மதுரை: காவல் நிலைய மர்ம மரண வழக்குகளில் பிரேத பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உடன் இருக்கவும், வீடியோவை மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனது சகோதரர் மர்ம மரணம் தொடர்பாக மறுபிரேத பரிசோதனை செய்யவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக்கோரியும் மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், மறுபிரேத பரிசோதனை செய்யவும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிபட்டிருந்தது.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் நிலையங்கள், சிறைச்சாலைகளில் சந்தேக மரணம் தொடர்பாக புகார் எழுந்தால், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவர் பிரேத பரிசோதனையின்போது உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். பிரேத பரிசோதனைக்கு முன் புகைப்படம் எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவு முடிந்ததும், சம்பந்தப்பட்டவரின் பெயர், வழக்கு தொடர்பான அத்தியாவசிய விபரங்கள், பிரேத பரிசோதனை தொடர்பான விபரங்களையும் அந்த வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
இதை சீல் செய்து அனைத்து விபரங்களுடன் விசாரணை அதிகாரிக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அனுப்ப வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் வீடியோ காட்சிகளை இறந்தவரின் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கும் வழங்க வேண்டும். இதுவே இறந்தவரின் குடும்பத்தினர் உடனடியாக சட்டப்பூர்வ தீர்வுகளை காண உதவும். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட உடலை குறைந்தது 48 மணி நேரம் பிணவறையில் பாதுகாக்க வேண்டும். இதற்குள் தகனம் உள்ளிட்ட வகையில் உடலை அப்புறப்படுத்தினால், இரண்டாம் பிரேத பரிசோதனையின் நோக்கம் பயனற்றதாகி விடும். இவ்வாறு கூறியுள்ளார்.