கான்பூர்: உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயால், 3 குழந்தைகள் மற்றும் தம்பதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த ஹமாவ் கிராமத்தில் சதீஷ் (30), அவரது மனைவி காஜல் (26), அவர்களது மூன்று குழந்தைகள் சன்னி (6), சந்தீப் (5), குடியா (3) ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியதால், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினர்.
அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி மூர்த்தி கூறுகையில், ‘குடிசையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினர், மோப்ப நாய் படை, போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்’ என்றார்.