புதுடில்லி:”நம் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை ஒரு இயக்கமாக செயல்படுத்துவோம். கைவினை கலைஞர்களை, தொழில்முனைவோராக்குவதே அரசின் நோக்கம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கருத்தரங்கம்
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் பெறும், இணையக் கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இதன் கடைசி இணையக் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
‘பிரதமர் விஸ்வகர்மா குஷால் சம்மான்’ எனப்படும் கைவினை கலைஞர்கள் மேம்பாட்டு திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
நம் நாட்டின் பாரம்பரியத்தை இன்றும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பில், கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை ஒரு இயக்கமாக செயல்படுத்த உள்ளோம். அதை, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து நிறைவேற்ற வேண்டும்.
நடவடிக்கை
கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. அந்த வகையில் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், பெண்களான, கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை. கைவினைத் தொழில் என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாக மாற முடியும்.
கைவினைக் கலைஞர்களை, தொழில்முனை வோராக்க வேண்டும்.
இதற்கு தேவையான தொழில் பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகள், டிஜிட்டல் உதவிகள், அவர்களுடைய பொருட்கள் விற்பனைக்கு உதவுதல், தேவைப்படுவோருக்கு கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தேவை.
கைவினைக் கலைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குவது, சந்தைப்படுத்த உதவுவதில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கேற்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மா’ இணையதளம்
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென், ௯௯, கடந்தாண்டு, டிச., ௩௦ல் காலமானார். அவரது நினைவாக, ‘மா’ என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் பெயரில் உள்ள இணையதளத்தின் இணை தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.இதில், ஹீரா பென் தொடர்பான கட்டுரைகள், அவர் குறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கட்டுரைகள், புகைப்படங்கள், ‘வீடியோ’க்கள், அவருடைய மறைவுக்கு உலகத் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்