கொரோனாவை மிஞ்சும் வேகத்தில் பரவுகிறது மீண்டும் மிரட்டும் எச்3என்2 இன்புளூயன்சா: வைரஸ் காய்ச்சலால் பலர் அவதி; இருமல், சளி, காய்ச்சல் அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாடு அரசு நேற்று ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டது. இருப்பினும் பொதுமக்கள் இன்னும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வைரஸ் கொரோனாவை விட வேகமாக பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  

இன்புளூயன்சா ஏ வைரஸின் துணை வகையான எச்3என்2 தற்போது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி, பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பதிப்பால் இந்த சீசனில் அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி விட்டனர். இதை உறுதிப்படுத்தி உள்ள ஒன்றிய அரசு தற்போது  இந்த வைரஸ் காய்ச்சலினால் நாடு முழுவதும் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. கடும் குளிர் சூழலில் இருந்து உடனடியாக வெப்ப சூழலுக்கு வானிலை மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

* எச்3என்2 வைரஸ் என்றால் என்ன?
இது ஒரு இன்புளூயன்சா வைரஸ். இது சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் பறவைகள் மற்றும் பாலூட்டிகளையும் பாதிக்கலாம். பறவை மற்றும் பிற விலங்குகளில் பரவி இந்த வைரசின் தோற்றம் உருமாறிக்கொண்டே இருக்கிறது. எச்3என்2 என்பது இன்புளூயன்சா ஏ வைரஸின் துணை வகையாகும். இதுதான் மனிதர்களிடையே பரவும் முக்கியமான வைரஸ் காய்ச்சல் என்று நாட்டில் உள்ள நோய் கட்டுப்பாடு மையங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

* அறிகுறிகள் என்ன?
மனிதர்கள் மற்றும் பறவை, பன்றி மற்றும் பிற வகையான உயிர் இனங்களில் இந்த வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டால் லேசான சுவாச தொற்று, காய்ச்சல் மற்றும் இருமல்  முதல் கடுமையான நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி, மற்றும் மரணம் வரையிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எச்3என்2(H3N2) வைரஸின் சில பொதுவான அறிகுறிகள்: குளிர், இருமல், காய்ச்சல், குமட்டல், வாந்தி ,தொண்டை வலி/தொண்டை எரிச்சல் ,தசைகள், உடல் வலி சில சந்தர்ப்பங்களில் வயிற்றுப்போக்கு, தும்மல், மூக்கு ஒழுகுதல்
இந்த வைரஸ் பாதித்தால் சுவாசிப்பதில் சிரமம், மார்பில் வலி அல்லது அசவுகரியம் ஏற்பட்டாலோ அல்லது தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை சந்திப்பது மிகவும் முக்கியம்.

* வைரஸ் எப்படி பரவுகிறது?
மிகவும் எளிதாக பரவக்கூடிய தொற்றாக எச்3என்2 இன்புளூயன்சா வைரஸ் உள்ளது. இருமல், தும்மல் அல்லது வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர் பேசும் போது வாயில் இருந்து வெளி வரும் எச்சில் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. வைரஸ் இருக்கும் ஒரு இடத்தை தொட்ட யாராவது அவர்களின் வாய் அல்லது மூக்கைத் தொட்டால் அது பரவும். கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அடிப்படையில் மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இதனால் பெரும் ஆபத்து ஏற்படும். மொத்தத்தில் கொரோனா போல் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவும்.

எதை தவிர்க்கலாம்?
* பொது இடங்களில் எச்சில் துப்புதல்
* பிறருடன் கைகுலுக்குதல், கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பது.  
* மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடுவது.

* ஆன்டிபயாடிக்ஸ் வேண்டாம்
காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், உடல்வலி போன்று தற்போது வரும் பல்வேறு உடல்நலக்குறைவுகள் இன்புளூயன்சாவால் ஏற்படுகிறது. இதற்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்து, மாத்திரைகள் தேவையில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது.

* சிகிச்சை முறைகள்
இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் உள்ளிட்ட திரவ நிலையில் உள்ள உணவை சாப்பிட வேண்டும். சுயமாக மருந்து சாப்பிடாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

* செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை
இன்புளுயன்சா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் வேகமாகப் பரவும். எனவே சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை அனைத்தும் கொரோனா தொற்றுக்கு பின்பற்றும் நடைமுறைகள் அடிப்படையில் உள்ளன. அதன் விவரம்:
* உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* முககசவம் அணிந்து கொள்ள வேண்டும்
* மக்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள கூட்டநெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் மூக்கு, வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* இருமும் போதும், தும்மும் போதும் மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்
* நீர் சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏராளமான திரவ உணவுகளை சாப்பிட வேண்டும்.
* முதற்கட்டமாக காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால்  பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.