பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து 3 நாள் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: கர்நாடக சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ல் முடிவு பெறுகிறது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் 18 வயது முதல் 19 வயதிலான 9 லட்சத்து 17 ஆயிரத்து 241 பேர் புதிதாக இத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 763 பேர் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.21 கோடி ஆகும். வாக்காளர்கள் பயம் இன்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கையும் தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. வாக்கு இயந்திரங்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த உடனே அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.