மதுரை: திருச்சியைச் சேர்ந்த நித்யா, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.
இவரது மனுவை நிராகரித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நித்யா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி கோட்டாட்சியரிடம் இருந்து சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது மகன், மகளுக்கு இணையம் வழியாக தந்தையின் சாதியான காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்களின் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் பெறலாம் என அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டாட்சியர் சாதி சான்றிதழ் வழங்க மறுத்தது தவறு. அவரது உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு கோட்டாட்சியர் வழங்க வேண்டும். மனுதாரரின் மனுவை சட்டப்படி பரிசீலித்து சாதி சான்றிதழ் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.